நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 2

Proud to be Hindu - AgniveerThis translation in Tamil is contributed by Gnaanaboomi. Original post in English is available at http://agniveer.com/why-i-am-proud-to-be-hindu-part-2/ 

இதன் ஆங்கில மூலம் – http://agniveer.com/why-i-am-proud-to-be-hindu-part-2/ – தமிழாக்கம் – ஞானபூமி குழு (http://www.gnanaboomi.com)

 

காரணம் 6 – ஹிந்துமதம் – ஆராய்ச்சிகளுக்குக்கும் மறுமலர்ச்சிக்கும் தோதானது

ஹிந்துமதத்திற்கு எந்தவொரு புத்தகத்தையோ, மனிதரையோ, வரலாற்றையோ, கொள்கையையோ தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய வழிபாட்டு முறை எவ்வாறாக  இருப்பினும் கவலையில்லை. நீங்கள் அகர்பத்தி ஏற்றிக் கொண்டு வழிபடுவீர்களோ, ஹவன்  ஏற்படுத்துவீர்களோ, கோவிலில் மணியை அடித்துத் தொழுவீர்களோ, கண்களை மூடிக்கொண்டு தனிமையில்  ஜபம் செய்வீர்களோ, விரதமிருப்பீர்களோ இல்லாவிடில் பண்டிகைகளில் இனிப்பு வகைகளை ருசி பார்ப்பீர்களோ – அனைத்தும், எதுவாகினும் சம்மதமே.

ஹிந்துமதம் என்பதன் அடிநாதம் என்ன என்பதை அனைத்திற்கும் அடிநாதமாய் இருக்கும் வேதங்களில் (வேதங்கள் நான்கே நான்கு மட்டுமே என்று முன்னமே கண்டிருக்கிறோம், அவை ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண என்ற நான்கேயாம்) யஜுர்வேதம் 1.5 இல் சொல்லப்படுகிறதுஇதம் அஹம் அந்ரிதாத் சத்யம் உபைமிநான் இத்தருணத்தில் உண்மையல்லாதவற்றைப் புறந்தள்ளவும் உண்மையை ஏற்றுக்கொள்ளவும் பாடுபடுகிறேன். இத்தருணத்தில்கவனிக்கஅதாவது ஹிந்துமதம் என்பது இத்தருணத்தில், நிகழ்காலத்தில் பின்பற்றுபனவற்றைப் பற்றியது, இப்போது எது சிறந்தது என்பதைப் பற்றியதுமுந்தைய காலத்தில் எப்படி என்ன நிகழ்ந்திருந்தாலும், இப்போது என்ன என்ற சிந்தனை பற்றியது. (ஆமாம், நான் ஆன்மிக ரீதியாக என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறேன் என்பதே முக்கியம், எனக்கு முன்னால் அவர் அப்படி இருந்தார், இவர் இப்படி இருந்தார் என்பதை அறிவது சிறப்பே, ஆனால் என் முன்னேற்றம், தற்போது எப்படியுள்ளது என்பதை கவனத்திற்குக் கொள்ளத் தூண்டுவது ஹிந்து மதம்). ஒவ்வொரு கணமும் ஒரு ஆராய்ச்சியாளனின் பரிசோதனை முயற்சி போல சிறிதளவேயாயினும் முன்னேற்றம் என்பதை குறிக்கோளாகக் கொண்டது ஹிந்து மதம்.

ஹிந்துமதம் நீ முன்னர் பற்றுக்கோலாகக் கொண்டதை விடாப்பிடியாகப் பற்றிக் கொள் என்று போதிக்கவில்லை. நீ தற்போது எதை பற்றுக்கோலாகக் கொண்டிருக்கிறாய் என்பதை தற்காத்துக்கொள் என்கிறது. அவ்வாறு முடியாவிடில் அதை பரிசோதித்துப் பார், உண்மை எதுவென உணர், மேலும் வளர் என்று கூறுகிறது.

மற்ற சமயங்களைப் போலல்லாமல் ஆராய்ந்து உண்மையறிதல், சுய ஞானத்தை வளர்த்துக் கொள்ளல்  என்பது ஹிந்துமதத்தில் உற்சாகப்படுத்தப் படுகிறது. பார்க்கப் போனால், பல வரிகள் குறிப்பிட்டுச் சொல்வது என்னவெனில், புதிதான தகவல், அறிவு, ஞானத்தைத் தேடுவதில் எப்போதும் தடையறாது இல்லாவிடில் ஒருவருக்கு ஞானம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என்பதே. ஞானம் ஒன்றே விடுவிக்கக் கூடியது.

கடவுளை அறிய, ஆன்மிகத்தை அறிய, மறுபிறவி போன்றவற்றை மிகத் தெளிவாக உணர கணிதமும் வான சாஸ்திரமும் நிச்சயம் பயில வேண்டும் என்று ஹிந்துமதம் போல வேறெந்த மதமும் சொன்னதாய் நான் கண்டதில்லை இதுவரை.

அதே போல, வேறெந்த சமயமும் “ஒரு கருத்தை அது எவ்வளவு முட்டாள்தனமானதாய் இருப்பினும் கூட நீ அதை நம்பிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை, ஆனால் எது முக்கியம் என்றால் நீ உண்மை என்ன என்பதை விடாப்பிடியாய் அறிய முற்படுகிறாயா என்பதே முக்கியம்” என்று சொன்னதாய் நான் கண்டதில்லை.

வேறெந்த சமயமும் “உன்னை மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டேயிரு, பரிசோதனை செய், உண்மைதானா என்பதில் ஐயமற தெளிவடை என்றோ, சிறந்த வழிமுறைகளைப் பின்பற்று” என்றோ  தூண்டிக்கொண்டே இருப்பதை நான் கண்டதில்லை. இதன் சாராம்சம் என்ன – பழங்கதையைத் தூர எறிந்து விட்டு நிகழ்காலத்தில் வாழ், அதன் மூலம் பிரகாசமானதொரு எதிர்காலத்தைப் படைத்துக் கொள் என்பதே.

மறுமலர்ச்சி, முன்னேற்றம் கூடிய மாற்றம் என்பதை வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் ஊக்கப்படுத்துவதே தவிர எங்கோ சொல்லப்பட்ட “தெய்வீக வார்த்தை” களின் அசட்டுப் பிசட்டு அர்த்தங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிரு என்பதல்ல!

இதனாலேயே ஹிந்து சமூகத்தின் பால் பல்வேறு மூடப் பழக்கங்களும் சமூக அவலங்களும் பரவி இருந்த போதிலும் அதே சமூகத்தினிலிருந்தே இப்பழக்கங்களை, தீமைகளை எதிர்த்து அழிக்கும் மறுமலர்ச்சி தோன்றிக் கொண்டே இருந்திருக்கிறது. மேற்சொன்ன கோட்பாடுகளாலேயே, சமூக அவலங்களான ஜாதிப் பாகுபாடு, சதி, பல தார மணம், வரதக்ஷிணை போன்றவற்றை எதிர்த்த மறுமலர்ச்சி விதிகளை எவ்வித முரண்பாடுகளுமின்றி இயற்கையாகவே சுவீகரித்துக் கொள்ள முடிந்தது.

Why-I-am-proud-to-be-Hindu-Part-2

கபீர், நானக், தயாநந்த சரஸ்வதி போன்றவர்கள் இன்றளவிலும் சிறந்த ஒரு இடத்தை மக்கள் மனதில் பிடித்திருப்பதன் காரணம் இதுவேஅவர்கள் புரையோடிய பழக்கங்களாக இருந்த சிலவற்றையும் தைரியமாக எதிர்த்ததனாலேயே.

இதனால் தான் ஹிந்து தர்மத்தை ஒரு மதம் அல்ல – அது ஒரு மேம்படுத்தப் பட்ட வாழ்க்கை முறை என்று அடிக்கடி கூறப் படுகிறது.

எனவே, நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராக இருந்தால், மறுமலர்ச்சியாளராக இருந்தால், கண்டுபிடிப்பாளராக இருந்தால் – நீங்கள் ஒரு ஹிந்துவே – உங்களின் மத கோட்பாடோ, வழிபாடோ நம்பிக்கையோ – அவை எதுவாக இருந்தாலும் சரி. நியூட்டன் ஒரு ஹிந்து, ஐன்ஸ்டீன் ஒரு ஹிந்து, அப்துல் கலாம் ஒரு ஹிந்து, ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு ஹிந்து – ஒவ்வொரு சிந்திக்கத் தகுந்த மனிதனும் ஹிந்துவே. எவ்வளவுக்கெவ்வளவு சிந்திக்கும் திறன் உண்டோ, அத்தனைக்கத்தனை ஹிந்து அவர்.

காரணம் 7 – ஹிந்துமதம் – ஒரு சுய பிரக்ஞையின் பயணம்

ஹிந்து தர்மத்தின் அடிப்படை கருத்து என்ன – துன்பத்தின் மூலகாரணம் அஞ்ஞானம் (அவித்யை), அதற்கு தீர்வு ஞானம் (வித்யை) – என்பதே. இந்த வித்யையை வெளிப்புறமாக திணிக்க முடியாது. அது சுயமாக கண்டறிய வேண்டிய ஒன்று. எப்படி? அறிவு, செயல், பகுத்தாராய்தல் மூலமாக. வெளிப்புறமாக இருக்கும் ஊக்கிகள் இவ்வழிக்கு நிச்சயம் உதவலாம். ஆனால் எவ்வாறிருப்பினும், பசி எடுத்தவன் தானே சாப்பிட வேண்டுமே போல, ஒருவன் தன் சுய பிரக்ஞையின் பயணத்தைத் தானே தன் முயற்சியால் எடுக்க வேண்டும்.

அதே சமயம், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட முறையில் விசேஷமானவர்கள். எனவே கிளிப் பிள்ளைக்கு சொல்வதைப் போல எங்கோ எப்போதோ சொல்லியிருப்பதை திருப்பித் திருப்பிச் சொல்வதோ, ஆராய்ந்து அறியப் படாத கருத்துக்களை குருட்டாம்போக்கில் பின்பற்றுவதோ இத்தனித்தன்மை வாய்ந்த மனிதத்தை அவமதிப்பது போலாகும்.

எனவே, பிரசங்கங்களும், புத்தகங்களும், வார்த்தைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாக இருப்பினும், அவைகளை ஊக்குவிப்பதாய் இருப்பினும், ஹிந்துமதம் சொல்வது என்னவென்றால் இங்கேயும் ஹிந்து தர்மம் தனித்து நிற்கிறது – “நீ ஒருவனே உனக்குச் சிறந்த ஆசான்என்பதே.

ஆம், வேதங்கள் ஹிந்துமதத்தின் ஆணிவேர் தான். சிலருக்கு பகவத் கீதை வழிகாட்டியாகிறது. சிலர் ராமாயண மஹாபாரதங்களைக் கைக்கொண்டு வாழ்வர். ஆனால் இவை எதுவுமே கட்டாயமாக்கப் படவில்லை ஹிந்துமதத்தில். சர்வ சுதந்திரனாக நீ உன் விடுதலையைத் தேடலாம். இது நினைக்கும் போதே எப்படி இருக்கிறது? இதில் ஒரே நிபந்தனை. அது என்ன?நீ உன் பாதையை எப்படி சர்வ சுதந்திரனாய் தேர்ந்தெடுத்தாயோ, அதே போல அடுத்தவனையும் செய்ய விடுஇது மட்டுமே.

காரணம் 8 – ஹிந்துமதம் – நடைமுறையில் சாத்தியமான சகோதரத்துவத்தின் அர்த்தம் (சகிப்புத்தன்மை அல்ல)

இக்காரணம் நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் என்பதில் முக்கிய்மானது. சுயத்தின் தேடல் என்பதை ஒவ்வொருவரும் தானாகவே தொடங்கியிருப்பது. ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர் என்பது திண்ணம். எனவே ஒவ்வொருவரும் தனக்குத் தோதான பாதையை தேர்ந்தெடுப்பதை ஹிந்துமதம் மிக இயற்கையாகவே ஏற்றுக்கொள்கிறது. எனவே நம்பிக்கைகள் பலவிதமாய் இருப்பதை ஊக்குவிக்கவும் செய்கிறது. ஒரு ஹிந்துவல்லாத எவரும் பாரத வர்ஷத்தில், இத்திருநாட்டில் இரண்டாந்தர குடிமகன் போல வாழ வேண்டியதில்லை.

பாரத திருநாடு பல நூற்றாண்டுகளாகவே பலதரப்பட்ட மத நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. ஹிந்துஸ்தானத்தில் க்றிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பெளத்தர்களுக்கும் இன்னபிற சமயத்தவருக்கும் தனித்தனியான கோட்பாடு என்று இருந்ததே இல்லை. இதுஎங்கள் (மூட) நம்பிக்கைகளைப் பின் பற்றுபவர்களே மிக தனித்துவம் வாய்ந்த சிறந்தவர்கள்என்று தெளிவாக அறைகூவும் பிற தர்மங்களிலினும் மிக மாறுபட்ட ஒரு கருத்தாகும். 21ஆம் நூற்றாண்டிலும் பிற நம்பிக்கைகளைப் பின்பற்றுவோர் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டிக் கொள்ளக்கூடாது என்றோ அல்லது தமது “புனித ஸ்தலம்” ஆகிய நகரங்களுக்குப் பிற மதத்தவர் வரக் கூடாது என்பது போன்ற இத்தகைய நம்பிக்கைகள் கொண்ட நாடுகளைக் காண்கையில் வெட்கக்கேடான ஆச்சரியம் உண்டாகிறது. இத்தகைய நாடுகளில் பெண்களுக்கு, ஹிந்துக்களுக்கு, க்றிஸ்தவர்களுக்கு, ஜைனர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு வேறுபடும் தண்டனை முறைகளும் உண்டு, ஒரு ஆயிரம் ஆண்டுகளாகவாவது இம்முறை பழக்கத்திலிருக்கிறது.

அதே ஹிந்துமதத்தை ஆணிவேராகக் கொண்ட பாரத நாட்டில், சகோதரத்துவம் என்பது அடிமரம் போலாகும். 80 சதவிகிதத்திற்கும் மேல் ஹிந்துக்களாக உள்ள இத்திருநாட்டில்  பல்வேறு சமயங்களில் ஜனாதிபதியாக இருந்திருப்பவர்கள் இஸ்லாமியர்கள். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒரு க்றிஸ்துவர். முப்படைத் தளபதி ஒரு க்றிஸ்துவர். வெகு காலமாக நம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ஒரு இஸ்லாமியர். நமது பாலிவுட் திரை நட்சத்திரங்களில் பிரபலமானவர்கள் பலர் இஸ்லாமியர். எல்லாவற்றிற்கும் மேலாக, 2013 இல் நடந்த கும்பமேளாவை நிர்வகித்தவர் ஒரு இஸ்லாமியர். இன்னார் இம்மதத்தைச் சேர்ந்தவர் என்ற நினைவேதும் இல்லாமல் தான் இருந்து வந்திருக்கிறோம் நாம். மேலும் ஒருவரின் மதம் இன்னதென்ற வகையில் இல்லாமல் அவரின் திறமைக்காக அவரைப் போற்றி வந்திருக்கிறோம் நாம். இத்தகைய பண்பின் பெயர் சகிப்புத்தன்மை அல்லசகோதரத்துவம்இது போல ஏதாவது ஒரு நாட்டில் இருக்கிறதா என்றால்நான் காணவில்லை அப்படியொரு நாட்டை. இதுவே ஹிந்துஸ்தானம் உலகனைத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று என்பதற்குச் சான்று.

(ஆனால் இதே சகோதரத்துவமே இன்றைய காலகட்டங்களில் அரசியல் கட்சிகளின் “சிறுபான்மையினர் நலம்” என்ற நாடகத்திற்காக பிரச்சினையாக்கப் படுகிறது. இது ஒரு கவலையளிக்கக் கூடிய விஷயமாக வளர்ந்து விட்டதென்பதும் உண்மை. அனைவரும் சமம் என்ற கோட்பாடு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சாராரை “மகிழ்விப்பதற்காக” செய்யப்படும் ஜாலங்கள் என்றுமே பலனளிக்கப் போவதில்லை. ஹிந்துமதம் அதை எதிர்க்கவும் செய்கிறது. யாவரும் சமம், எவ்வித பாகுபாடுமில்லை – என்பதே ஹிந்துமதத்தின் தாரக மந்திரம்.

காரணம் 9 – பண்டிகைகள், வழிபாட்டு முறைகள், வார்த்தைகள் – இவைகளுக்குள் உள்ளடங்கிய மூலப் பொருள்

மதம் என்ற சொல் நினைவுக்கு வரும் போதே அதை ஒட்டிய வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் குறியீடுகளுமே தோன்றும். ஒரு இஸ்லாமியர் நமாஸ் செய்வதோ, தாடியை ஒரு விதமாக திருத்தி வைத்துக் கொள்வதிலோ, ஒரு க்றிஸ்தவர் சிலுவைக் குறியீட்டை அணிவது போலவோ அல்லது ஞானஸ்நானம் செய்து கொள்வது போலவோ, ஹிந்துமதத்திலும் பலப்பல வழிபாட்டு முறைகளுண்டு.  இந்தியா வண்ணமயமாக இருப்பதின் முக்கிய காரணங்களில் ஒன்று அதன் பலப்பல பண்டிகைகளும், வழிபாட்டு முறைகளுமே. இவை இந்தியாவின் உலகெங்கும் காண முடியாத “வேற்றுமையில் ஒற்றுமையை” பறைசாற்றுகிறது.

ஹிந்துமதத்திலுள்ள ஒரே வித்தியாசம்எந்தவொரு சடங்கோ, பண்டிகையோ, குறியீடோ ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது காலகட்டத்திற்கு உட்பட்டதல்ல. இவை காலப் பிரமாணங்களுக்கும் இடத்திற்கும் மாறுபடும். எனவே ஒரு தமிழரோ, வங்காளியோ, மலையாளியோ தாம் வழிபடும் முறை, பின்பற்றும் மத ரீதியான பழக்கவழக்கங்கள், குறியீடு, இவைகளில் வித்தியாசங்கள் நன்றாகக் காணப்படும். பிற மதங்களில் இவை வெகு கண்டனத்திற்குரியதாகவும் தண்டனைக்குரியதாகவும் கருதப்படும். ஆனால் ஹிந்துமதத்தில் இவை ஊக்குவிக்கப் படுகின்றன.  ஏனெனில் இவையனைத்திலும் மூலப்பொருளாவது பரம்பொருளை அடைவது. அனைத்திலும் பரம்பொருளைக் காண்பது. எதையுமே பரம்பொருளில் காண்பது.

ஏன்?

இதை முக்கியமாக கவனியுங்கள். ஒரு நகரத்திற்குச் செல்ல பலவேறு வழிகளுண்டு. மும்பை நகருக்குச் செல்ல ஒரே வழி டெல்லியிலிருந்து போவது தான் என்று யாரேனும் சொல்வாரானால் எவ்வளவு நகைப்புக்குள்ளாவாரோ அதே போல நகைப்புக்குரியது பரம்பொருளை “எங்கள்” வழியில் மட்டுமே அடைய முடியும் என்று அறைகூவுவது. ஒரு ஹிந்துவுக்கு நன்றாகத் தெரியும் – பரம்பொருளை அடையப் பல வழிகள் உண்டு. அனைத்துமே பரம்பொருளால் ஆனதுதான் என்பது.

இதுவே இந்தியா கலாச்சாரத்திற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வேற்றுமையிலும் ஒற்றுமை ஓங்கியிருக்கிறது.  நவீனமானதாகவும் புராதனமானதாகவும் மாற்றங்களை வரவேற்பதாயும், புத்துணர்ச்சியுடனும் அதே சமயத்தில் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியதாகவும் ஹிந்துமதம் திகழ்வதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

ஹிந்து என்ற பெயர் முதற்கொண்டு உதாரணமாய் திகழ்வது ஹிந்துமதம் மாற்றம் ஏற்றம் இவற்றைக் கொண்டதாய் இருக்கிறதென்பது. ஹிந்து என்ற பெயர் வேதங்களில் காணப்படுவதில்லை. ராமாயண மஹாபாரதத்திலோ, உபநிஷதங்களிலோ மற்றைய புனித க்ரந்தங்களிலோ இச்சொல் காணப்படவில்லை! இது மிக சமீபத்தில் தரப்பட்ட பெயர். சொல்லப் போனால் மனுஷ்ய தர்மம், மானுட தர்மம் என்ற பெயர் இதற்குப் பொருத்தமானதாகும். ஆரியர் (மிக உயர்வானவர்) என்ற பெயரும் பொருந்தும். பெயர் எதானால் என்ன? இதன் உட்பொருள் – ஞானமடைந்த வாழ்வு வாழ்வதற்கான வேரைப் பின்பற்றுதல்  – என்பதே தவிர “பெயர் வைக்கும்” விழா இதற்குத் தேவைப் படவேயில்லை. என்றைக்கும் சாஸ்வதமாய் இருந்திருக்கும், இருக்கப் போகும் சமயத்திற்கு நம் பெரியோர் “ஸனாதன தர்மம்” என்று எத்துணை அழகாகப் பெயரிட்டிருக்கிறார்கள்!

ஒரு புத்தகத்தையோ அல்லது தூதரையோ சார்ந்து இருப்பதாலேயே சமீபத்தில் கிளம்பிய சில மதங்களுக்குப் பெயர் தேவைப்பட்டன. காலப்போக்கில் அனைத்து சமயங்களுக்கும் பெயர் வைப்பது ஒரு வழக்கமானது. அனைத்தையும் ஒரு டப்பாவில் அடைத்துப் பார்த்து விட்டால் வசதியாகப் போய் விடுமல்லவா? எனவே ஒரு புத்தகத்தையோ தூதரையோ நம்பாமல் இருப்பது பெரிய பாவம் என்ற கருத்தை ஏற்காதவர்கள், சிந்து சமவெளி நாகரிகத்தவர்கள் என்பதைக் காட்டஹிந்துஎன்ற நாமகரணம் செய்யப்பட்டார்கள்.

எது எப்படியிருப்பினும், நாம் நம்மை ஹிந்து என்று அழைத்துக் கொள்வதோ, ஆரியர் என்று சொல்லிக் கொள்வதோ, பல வழிபாட்டு முறைகள் உள்ளதோ, நம் குறிக்கோள் ஒன்றே. தாய்ப்பாசம் என்பது நீ உன் அன்னையை அம்மா என்றோ, அம்மீ என்றோ மம்மீ என்றோ அழைப்பதால் மாறுபடுமா என்ன? தாயை எப்படி அழைத்தால் என்ன? தாய் மதத்தை எப்படி அழைத்தால் என்ன? தாய்த் தத்துவத்தை எவ்வாறு அழைத்தால் என்ன? முட்டாள்கள் தான் அடையகுறியீடுகளுக்கு அடித்துக் கொள்வார்கள். ஹிந்துக்கள் உட்பொருளை மட்டுமே நேசிப்பார்கள்.

காரணம் 10 – வேதங்களை மிஞ்சி எதுவுமில்லை – அவையே ஹிந்து மதத்தின் ஆணிவேர்

நான் உலகின் பலதரப்பட்ட, பிரபலமானவையான மத, தத்துவ விசாரக் கருத்துக்களை ஆழ்ந்து படித்துள்ளேன். அவைகளில் மிகச் சிறந்த கருத்துக்கள் உண்டு என்பதும் உண்மை. அது பைபிளாகட்டும், குரானாகட்டும், புராணங்களாகட்டும், அவையனைத்தும் பரம்பொருளைத் தேடுவதையும் பொறுப்புள்ள, அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வதற்கே வலியுறுத்துகின்றன. இவற்றை எழுதியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஆனால் வேதங்களின் ஞான ஆழத்தையோ பல்முகமாய் உள்ள இயல்பையோ அடித்துக் கொள்ள எதுவுமில்லை! சுமார் இருபதாயிரம் மந்திரங்கள் உள்ள வேதங்களில் ஒரு மனிதனுக்கு எந்த தேவையையும் நிறைவு செய்யும் அனைத்தும் அடங்கியுள்ளனஅறிவியல், மனக் கட்டுப்பாடு, ஆரோக்கியம், தொழில்நுட்பம், கல்வி, மேலாண்மை, வாழ்வியல் முறை, சமூகத்துவம் – இன்னும் எது வேண்டுமானாலும்!  இவற்றில் மற்ற புத்தகங்களைப் போல கதைகளோ வரலாறோ அடங்கியிருக்கவில்லை. மாயாஜாலம் நிகழும் என்பது போன்ற குறிப்புகளில்லை. அவைகளில் அடங்கியுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற மிரட்டல் நிபந்தனைகளும் இல்லை!

ஓ! ஆமாம், இவற்றைச் சொல்லியாக வேண்டுமே!

  • பூமி என்பது வேதங்களில் உருண்டையானது தான்!
  • வேதங்களில் சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை!
  • நற்தேவதைகளும் சாத்தான்களும் இவைகளில் இல்லை!
  • ஆதாமும் ஏவாளும் ஏதோ ஒரு பழத்தைக் கடிப்பதில்லை வேதங்களில்!
  • வேதங்களில் கடவுள் இறை தூதரை அனுப்புவிப்பதாய் கூறவில்லை!
  • கடவுள் என்பவர் மனிதனைப் போலவே தோற்றமளித்துக் கொண்டு ஒரு சிங்காதனத்தில் அமர்ந்து கொண்டிருக்கவில்லை!
  • வேதங்களில் கூறப்பட்டிருக்கும் இப்பிரபஞ்சத்தில் சொர்க்கம் என்றோ நரகம் என்றோ பாகுபாடு நகரங்கள் இல்லை!
  • முக்கியமாக, நாம் எந்த ஒரு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை!
  • மேலும், நம் வினை என்பது ஏற்கனவே நம் தலையில் எழுதியிருப்பதாய் எங்குமே காணப்படவில்லை வேதங்களில். 

மாறாக, வேதங்கள் உண்மையைக் கண்டுணர ஆராய்ச்சி மற்றும் பகுத்தாய்வு செய்யத் தூண்டுகிறது. அவை நம்மை நம் சொந்த முயற்சியில் நம் எண்ணம் மற்றும் செயல்களால் நம் வினையைத் தீர்மானிக்கும் படி முழக்கமிடுகின்றனநம்மை அறிவியலாளர்களாகவும் (உண்மை) பகுத்தறிவாளர்களாகவும் இருக்கும்படி வலியுறுத்துகின்றன!

அதே சமயத்தில், வேதங்கள் எவரொருவர் அறிவியல்பூர்வமாக இல்லாமல் மூடநம்பிக்கைகள் சார்ந்த “சொர்க்கம், நரகம், இறுதி தீர்ப்பு நாள், நற்தேவதை, சாத்தான், ஆதாம், ஏவாள், மாயாஜாலம்” போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ, அவரை எக்காரணம் கொண்டும் எள்ளி நகையாடவோ, கேலிக்குள்ளாக்கவோ கூறவில்லை. மாறாக, எப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஒற்றுமையுடன் இருக்குமாறு கூறுகிறது. குறிக்கோள் முக்கியமே தவிர நம்பிக்கைகளல்ல!

மேற்சொன்னவை உங்களுக்கு என்னுடைய ஒரு தனிப்பட்ட காரணம் போலத் தோற்றமளிக்கலாம். இதற்குக் காரணம் வேதங்களை நீங்கள் சரியான முறையில் அறிய, படிக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நான் வேதங்களிலும் உலகின் பிரபலமான மற்றைய கருத்துக்களிலும் பல ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சியில் நான் கண்டதென்னவென்றால், வேதங்களை மிஞ்சுமளவிற்கு ஒரு புத்தகத்தை – அதன் முழுமையில், அறிவியல் சார்பில், வாழ்வை மாற்றியமைக்கக் கூடிய சக்தியில் – காணவில்லை! ஹிந்துமதத்தின் ஆணிவேரானது இன்னமும் வலிமையானதாய், மிக மிக நம்பத்தகுந்ததாய், சர்வ சக்தியுள்ளதாய் இருக்கிறது – எனக்குத் தெரிந்த வேறெதையும் காட்டிலும்! வேதங்கள் மட்டுமல்லாது இன்னமும் நான் பகவத் கீதை, உபநிஷதங்கள், புராணங்கள் என்று சேர்த்தேனானால் – முதிர்ச்சியடைந்த, ஞானமடைந்த மனதின் வெளிப்பாடாய் பின் வேறெதுவும் தோன்றவில்லை!

எனவேதான், ஒரு ஹிந்துவாக இருப்பதில் நான் பெருமையடைவதைத் தவிர வேறு ஒரு வழியுமில்லை. ஆனால் என் பெருமை வெறும் தற்பெருமையாக இல்லாமல், நன்னடத்தை, பொறுமை, சகோதரத்துவம், சுய கட்டுப்பாடு, அறிவியல் சார்ந்த மனமுதிர்ச்சி – இவைகளிலேயே நான் ஹிந்து என்று கூறிக்கொள்வதின் பெருமை இருக்கிறது, எத்தகைய அநீதியிலிருந்தும் எதிர்ப்பது என்பதில் இருக்கிறது, அறிவியல் சார்ந்த வாழ்வியலில் இருக்கிறது, மேலும், என் கருத்தில் சம்மதமில்லாதவர்களையும் நேசிக்கும் மனப்பான்மையில் இருக்கிறது, ஒரு ஞானமடைந்த மற்றொரு ஹிந்துவைப் போல நான் வாழ வேண்டும் என்ற என் அவாவில் இருக்கிறது, என்னுடைய நேர்மையுள்ள தன்னடக்கத்தில் இருக்கிறது.

ஆம்! நான் என்னை ஒரு ஹிந்து என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். அனைத்து மனித இனமும் இந்த ஆணிவேரில் தம் தொடர்பை உணர்ந்து கொள்ள வேண்டும், தாம் ஒரு ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று உளமார ஆசைப்படுகிறேன்.

கட்டுரையின் தமிழாக்கம்ஞானபூமி குழு (http://www.gnanaboomi.com)

The 4 Vedas Complete (English)

The 4 Vedas Complete (English)

Buy Now
Print Friendly

More from Agniveer

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 characters available